தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஸ்கள் ஆட்டோக்கள் ஓடவில்லை சாலைகள் வெறிச்சோடின


தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஸ்கள் ஆட்டோக்கள் ஓடவில்லை  சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 9 Jan 2022 10:25 PM IST (Updated: 9 Jan 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பஸ்கள் ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.

கிருஷ்ணகிரி:
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.
முழு ஊரடங்கு 
கொரோனா முதல் அலை, 2-வது அலை முடிந்து தற்போது 3-வது அலை பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் கடைகள் அடைக்கப்பட்டன. நேற்றும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. பால் வினியோகம், மருந்து கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. அதேபோல ஓட்டல்களில் பார்சல் உணவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. 
மேலும் பஸ், ஆட்டோக்கள், கார் என எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. நேற்று திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்கள் அதற்கான அழைப்பிதழை போலீசாரிடம் காண்பித்து சென்றார்கள். கடைகள் அடைப்பு காரணமாக கிருஷ்ணகிரி சென்னை சாலை, பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை, சேலம் சாலை, பழையபேட்டை, புதுப்பேட்டை, கே. தியேட்டர் சாலை என நகரின் அனைத்து சாலைகளும் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
போலீசார் கண்காணிப்பு 
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்தி போலீசார் எச்சரித்தனர்.
கிருஷ்ணகிரியில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கபிலன் (கிருஷ்ணகிரி டவுன்), சரவணன் (தாலுகா) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைகளில் தேவையின்றி சுற்றிய நபர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ராயக்கோட்டை, ஓசூர்
ராயக்கோட்டை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பகுதிகளில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் தவிர அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன. போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு போலீசார் முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முழு ஊரடங்கையொட்டி ஓசூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக எம்.ஜி. ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் ரோடு, தாலுகா அலுவலக சாலை, பஜார் தெரு மற்றும் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் சூளகிரியிலும் அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. முழு ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். நகரின் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதேபோன்று தேன்கனிக்கோட்டை, பர்கூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின.

Next Story