நாமக்கல் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்களும் வீடுகளிலேயே முடங்கினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடின. பொதுமக்களும் வீடுகளிலேயே முடங்கினர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பொது போக்குவரத்து இருக்காது என அறிவிக்கப்பட்டு இருந்ததால், அனைத்து பஸ்களும் டெப்போக்களிலேயே நிறுத்தப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் பஸ், ஆட்டோ, கார் என எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. லாரிகளும் மிக குறைவான அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் தேசிய நெடுஞ்சாலை, பஸ் நிலையங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
நாமக்கல் நகரை பொறுத்தவரையில் பிரதான சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை என நகர் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதியும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. அரசின் உத்தரவுபடி நகர் முழுவதும் மதுக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
போலீசார் எச்சரிக்கை
லாரி பட்டறைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. மருந்து கடைகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம். மையங்கள் மட்டுமே திறந்திருந்தன. இவற்றில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஓட்டல்களை பொறுத்தவரையில் ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறந்து இருந்தன. அவற்றிலும் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர்.
நகர் முழுவதும் போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் எங்கு செல்கிறீர்கள் என விசாரித்து அனுப்பி வைத்தனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த இளைஞர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். முககவசம் அணியாமல் வந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல்லில் உள்ள உழவர்சந்தை மற்றும் வாரச்சந்தை மூடப்பட்டு இருந்தன. முழு ஊரடங்கையொட்டி இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் காலை 6 மணி வரை இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதை காணமுடிந்தது.
ராசிபுரம், பள்ளிபாளையம்
ராசிபுரத்தில் நேற்று முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. அங்குள்ள சிறிய டீக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பஸ், லாரிகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் கடை வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். உழவர் சந்தை மூடப்பட்டிருந்தது. அரசு ஆஸ்பத்திரி, ஆவின் பால் விற்பனை நிலையம் வழக்கம்போல் செயல்பட்டன. பெரிய ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஆண்டலூர் கேட் பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் குருசாமிபாளையம், அத்தனூர், சிங்களாந்தபுரம், வடுகம் போன்ற பகுதியிலும் அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பஸ் நிலைய சாலையில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பயணிகள் இன்றி பஸ் நிறுத்தம் வெறிச்சோடி கிடந்தது. பள்ளிபாளையம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நகரம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முககவசம் இல்லாமல் செல்பவர்களை பிடித்து அறிவுரை கூறி முககவசம் அணியும்படியும், திறந்திருந்த சிறிய கடைகளை மூடும்படியும் அறிவுறுத்தினர். மேலும் இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்தனர்.
மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை
மல்லசமுத்திரம் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. போக்குவரத்து இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.. ஆங்காங்கே ஒரு சில வாகனங்கள் அத்தியாவசியமான தேவைக்கு மட்டும் விசாரணைக்கு பின்பு போலீசார் அனுமதித்தனர். அரசின் நடவடிக்கைக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து பிரிவினரும் முழு ஆதரவு தெரிவித்தனர்.
நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதிகள் மற்றும் மங்களபுரம், ஆயில்பட்டி உள்ளிட்ட 18 ஊராட்சிகளிலும் நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று காலை முதல் மாலை வரை கிராமந்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஓட்டல்களில் பார்சல் வழங்கலாம் என்று அனுமதி வழங்கியும் பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. ஓரிரு ஓட்டல்களில் மட்டும் பார்சல் வழங்கப்பட்டது.
குமாரபாளையம், பரமத்திவேலூர்
குமாரபாளையத்தில், நேற்று முன்தினம் நள்ளிவுரவு முதல் பஸ்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நேற்று ஜவுளி கடைகள், நகைக்கடைகள், மளிகைக்கடைகள், உழவர் சந்தை, காய்கறிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. குமாரபாளையத்தில் ஆனங்கூர் ரோடு, பள்ளிபாளையம் ரோடு, எடப்பாடி ரோடு, சேலம் மெயின் ரோடுகளும், தெருக்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கினார்கள். ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. குமாரபாளையம் அருகே உள்ள கிராம பகுதிகளில் விசைத்தறி நடத்துபவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொழிலில் ஈடுபட்டனர்.
முழு ஊரடங்கு காரணமாக பரமத்திவேலூர் வட்டாரத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நான்கு ரோடு, சிவா தியேட்டர் கார்னர், மோகனூர் ரோடு, பஸ் நிலையம், கடைவீதி, பள்ளிசாலை பகுதிகளில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் அறிவுறுத்தலின்படி வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டதுடன் தடுப்புகளை அமைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் பொதுமக்களை தவிர அனாவசியமாக தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரியும் பொதுமக்களை அழைத்து தடுத்து நிறுத்தி கனிவுடன் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. முககவசம் அணியாமல் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களை அழைத்து அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story