கண்மாயில் திடீர் உடைப்பு


கண்மாயில் திடீர் உடைப்பு
x

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் மணல் மூடைகளால் உடைப்பை அடைத்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் மணல் மூடைகளால் உடைப்பை அடைத்தனர்.

சறுக்கை சேதம்

திருவாடானை தாலுகா, ஆர்.எஸ்.மங்கலம் யூனியன், கானாட்டாங்குடி கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் முழுமையாக நிரம்பிய நிலையில் அதன் உபரிநீர் கடலுக்குச் சென்றது. இதில் கண்மாயின் வடக்குப்பகுதி சறுக்கை(உபரிநீர் செல்லும் பாதை) முற்றிலுமாக சேதமடைந்துவிட்டது.
இதனால் பாசனத்திற்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த அதிகளவு தண்ணீர் சேதமடைந்த சறுக்கை வழியாக வெளியேறியது. இதனை அறிந்த கிராம மக்கள் மணல் மூடைகளை அடுக்கி சேதமடைந்துள்ள சறுக்கையை தற்காலிகமாக சீரமைத்து உள்ளனர். 
ஆனால் மீண்டும் மழை பெய்தாலும் நீர்வரத்து இந்த கண்மாய்க்கு வரும் நிலையிலும் சறுக்கை மீண்டும் உடைந்து கண்மாய் நீர் முழுவதும் வெளியேறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூர்வார கோரிக்கை

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
 இந்த கண்மாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. எனவே இந்த கண்மாயை தூர்வாரி சேதமடைந்துள்ள மடைகள் மற்றும் சறுக்கைகளை புதிதாக கட்டித் தர வேண்டும் என பலமுறை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. 
தற்போது சறுக்கை சேதமடைந்துள்ளது. நாங்களே தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி சீரமைத்து உள்ளோம். எனவே நிரந்தரமாக இதை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story