முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருவண்ணாமலை
முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்று முன்தினமே வாங்கினர். இதனால் மளிகை, காய்கறி கடைகளில் கூட்டம் அலை மோதியது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணி வரை மீன், இறைச்சி கடைகள் செயல்பட்டன.
முழு ஊரடங்கால் நேற்று பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் அனைத்தும் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அனைத்து வாகன போக்குவரத்து முற்றிலும் நின்று போனதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய பகுதிகளில் தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியில் திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டும் செயல்பட்டன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.
ஆரணி
ஆரணியில் பிரதான சாலையான காந்தி ரோடு, மார்க்கெட்ரோடு, மண்டி வீதி, பெரிய கடைவீதி, அருணகிரிசத்திரம், சைதாப்பேட்டை, நகர எல்லை பெரியார் சிலை பகுதிகளில் ஆரணி டவுன் போலீசார் தடுப்புகளை அமைத்து வாகனங்கள் நகருக்குள் வராமல் கண்காணித்தனர்.
இருசக்கர வாகனங்களில் காரணமின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேத்துப்பட்டு, வந்தவாசி சாலை வழியாக ஆரணி நகருக்குள் கார், லாரி போன்ற வாகனங்கள் வராமல் மில்லர்ஸ்ரோடு, பையூர் வழியாக செய்யாறு சாலையில் திருப்பி விடப்பட்டது. அதேபோல் சைதாப்பேட்டை பகுதியில் இருந்து நகருக்குள் கார், லாரி போன்ற வாகனங்கள் வராமல் பைபாஸ் வழியாக திருப்பி விடப்பட்டது.
நகரின் எல்லைப் பகுதியில் சிலர் மறைவான இடங்களில் இறைச்சி விற்பனை செய்தனர். போலீசார் விரைந்து வந்து இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.
Related Tags :
Next Story