வேலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடின
வேலூர் மாவட்டத்தில் முழுஊரடங்கால் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் முழுஊரடங்கால் சாலைகள், கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 6-ந் தேதி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழுஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வேலூர் நகரில் உள்ள மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. மளிகை, காய்கறி, மீன், இறைச்சி உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருந்து, பால், உணவு உள்ளிட்டவற்றுக்காக பொதுமக்கள் கடைகளுக்கு சென்று வந்ததை காணமுடிந்தது.
சாலைகள் வெறிச்சோடின
ஓட்டல்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. அங்கு பார்சல் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. அரசு, தனியார் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. அதனால் ஆட்டோ, கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் இல்லாமல் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் சென்று வந்தன.
வேலூர்-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பம் சோதனைச்சாவடி வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை செய்து அனுமதித்தனர். சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறமாநிலங்களில் இருந்து வேலூர் வழியாக வேறு பகுதிகளுக்கு சென்ற வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதேபோன்று தமிழக-ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி, மாதனூர், பத்தலப்பள்ளி, கண்ணமங்கலம் கூட்ரோடு உள்பட மாநில, மாவட்ட 6 எல்லைகளில் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கலெக்டர் ஆய்வு
வேலூர் நகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, ஆரணிசாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை, கிரீன்சர்க்கிள், கலெக்டர் அலுவலக மேம்பாலம் பகுதி, மக்கான் சந்திப்பு, நேஷனல் சந்திப்பு, காமராஜர் சிலை சந்திப்பு, திருமலை-திருப்பதி தேவஸ்தான சந்திப்பு, மண்டித்தெரு மற்றும் கடைவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
முழுஊரடங்கை அமல்படுத்தும் வகையில் 57 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலைகளில் தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் கோட்டை காந்திசிலை அருகே வேலூர் வடக்கு போலீசார் முழுஊரடங்கை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், தேவையின்றி சுற்றி திரிந்தவர்களுக்கு அறிவுரைகள் கூறி அனுப்பினர்.
Related Tags :
Next Story