வேலூர்சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் 200 பேருக்கு கொரோனா


வேலூர்சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் 200 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Jan 2022 12:34 AM IST (Updated: 10 Jan 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர்
வேலூரில் உள்ள  சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பணிபுரியும் டாக்டர்கள் உள்பட அனைவருக்கும் தொற்று பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை

வேலூர்-ஆற்காடு சாலையில் சி.எம்.சி.மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் தமிழகம் மட்டுமின்றி பிற   மாநிலங்களை சேர்ந்த பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து, அவர்களின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். 
இந்த நிலையில் கொரோனா சிறப்பு வார்டில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறி காணப்பட்டது.

அவர்களுக்கு அங்கு   மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
கடந்த 10 நாட்களாக நடந்த பரிசோதனையில் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என்று 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. 

200 பேருக்கு கொரோனா

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சி.எம்.சி.மருத்துவமனையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு பணிபுரியும் நபர்களுக்கு தொற்று அறிகுறி காணப்பட்டதால் மருத்துவமனையிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என்று 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்கு பணிபுரியும் அனைவருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு நிறுத்தம்

மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் வெளி மாநிலம், பிற மாவட்டங்களை சேர்ந்த பலருக்கும் தொற்று கண்டறியப்படுகிறது. எனவே வெளிமாநிலம், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக முன்பதிவு செய்யும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும், மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு அவசர சிகிச்சை மட்டும் அளிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும் மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா பரவாமல் இருப்பதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றனர்.

Next Story