தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
மூடி இல்லாத பாதாள சாக்கடை குழி
தஞ்சை தொம்பன்குடிசை பகுதி நாகை சாலையில் பாதாள சாக்கடை குழி மூடி இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தற்காலிகமாக பாதாள சாக்கடை குழியை மரக்கட்டைகள், குச்சிகள் கொண்டு அடைத்து வைத்துள்ளனர். மேலும், பாதாள சாக்கடை குழியில் மூடி இல்லாததால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மூடி இல்லாத பாதாள சாக்கடை குழியினால் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் பாதாள சாக்கடை குழிக்கு மூடி அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தஞ்சை.
கழிவுநீர் வடிகால் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் களிமேடு பகுதி பரிசுத்தம் நகரில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதன் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுகள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையோரத்தில் கழிவுநீர் தேங்குவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசுத்தம்நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பரிசுத்தம்நகர்வாசிகள், தஞ்சை.
மயான கொட்டகை வேண்டும்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதி ருத்திரசிந்தாமணி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கான மயான கொட்டகை அமைக்கப்படவில்லை. இதனால் இறந்தவர்களின் உடலை திறந்தவெளியில் வெயிலிலும், மழையிலும் தகனம் செய்யும் நிலை உள்ளது. மேலும், தற்போது இறுதிசடங்கு செய்வதற்காக பயன்படுத்தப்படும் இடத்தில் கருவேலமரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியே விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதன் காரணமாக இறுதி சடங்கு செய்ய வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ருத்திரசிந்தாமணி கிராமத்தில் மயான கொட்டகை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-ருத்திரசிந்தாமணி கிராமமக்கள், தஞ்சை.
சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் அம்மன்பேட்டையை அடுத்த மணக்கரம்பை பகுதி வாணியர்தெருவில் சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்கள் சாலையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தேங்கி கிடக்கும் மழைநீரில் நடந்து செல்லும் சூழல் நிலவுகிறது. மேலும், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாணியர் தெருவில் உள்ள சாலையை சீரமைக்கவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-வாணியர்தெருவாசிகள், அம்மன்பேட்டை.
குடிநீர் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதி வாழ்க்கை கிராமம் வடக்கு தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் தண்ணீரின்றி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். எனவே, வாழ்க்கை வடக்குதெரு பகுதி மக்களின் நலன் கருதி அந்த பகுதியில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பாபநாசம்.
கான்கிரீட் பாலம் அமைத்துதரப்படுமா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி திருவிடைமருதூர் ஒன்றியம் பருத்திச்சேரி கிராமத்தில் மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ-மாணவிகள் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மரப்பாலம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சேதமடைந்த மரப்பாலம் எப்போது வேண்டுமானாலும் ஆற்றுக்குள் விழுந்து விடும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையிலும் பருத்திச்சேரி கிராமமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வேறுவழியின்றி மரப்பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சேதமடைந்த மரப்பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக கான்கிரீட் பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுப்பார்களா?
-பருத்திச்சேரிகிராமமக்கள், தஞ்சை.
Related Tags :
Next Story