முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கினர்
நெல்லையில் நேற்று முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கினர். அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
நெல்லை:
நெல்லையில் நேற்று முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கினர். அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
முழுஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தினமும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன.
நெல்லை டவுன் ரதவீதிகள், பஜார், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட், சமாதானபுரம், மகாராஜநகர், என்.ஜி.ஓ. காலனி, மேலப்பாளையம், பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்படாததால், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மக்கள் வீடுகளிேலயே முடங்கினர்.
பார்சல் உணவு
ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட யாரையும் அனுமதிக்கவில்லை. பார்சல் உணவு மட்டும் வழங்கப்பட்டது. செல்போன் செயலி மூலம் உணவு ஆர்டர் கொடுத்து பலரும் பார்சலில் உணவு பெற்றனர்.
இதனால் உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிகளவு உணவு பார்சல்களை விடுதிகள், வணிக நிறுவனங்கள், வீடுகளுக்கு சென்று வினியோகம் செய்தனர்.
வெறிச்சோடிய சாலைகள்
முழு ஊரடங்கையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. நேற்றும் பொது போக்குவரத்து அடியோடு முடங்கியது. அரசு, தனியார் பஸ்கள் அந்தந்த பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. லாரி, வேன், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களும் ஓடவில்லை.
இதனால் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், வண்ணார்பேட்டை மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடின.
தீவிர கண்காணிப்பு
முழு ஊரடங்கையொட்டி, நெல்லை மாநகரில் போலீசார் 7 இடங்களில் நிலையான வாகன சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவசர, அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக வெளியில் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
நெல்லையில் 18 இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். ரெயிலுக்கு செல்லும் பயணிகள், திருமணத்துக்கு செல்கிறவர்களிடம் உரிய ஆவணங்களை பெற்று சரிபார்த்த பின்னரே அனுமதித்தனர். நெல்லை மாநகரில் 500 போலீசாரும், புறநகர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரெயிலில் பயணித்த பயணிகள்
முழு ஊரடங்கில் பஸ் போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டாலும், ரெயில் போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் ரெயில் நிலையத்துக்கு செல்வதற்கு போதிய வாகன வசதி இல்லாததால், ரெயிலில் குறைவான பயணிகளே பயணித்தனர்.
முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தவுடன் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படும், கடைகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story