வருவாய் துறை அதிகாரிகள் போல் நடித்து முதியவர்கள் 2 பேரிடம் நகை பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வருவாய் துறை அதிகாரிகள் போல் நடித்து முதியவர்கள் 2 பேரிடம் நகை பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Jan 2022 8:07 PM GMT (Updated: 9 Jan 2022 8:07 PM GMT)

வருவாய் துறை அதிகாரிகள் போல் நடித்து முதியவர்கள் 2 பேரிடம் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு
வருவாய் துறை அதிகாரிகள் போல் நடித்து முதியவர்கள் 2 பேரிடம் நகையை பறித்த  மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
முதியவரிடம் நகை பறிப்பு
மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலூத்தாம்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 66). இவர் நேற்று முன்தினம் ஈரோடு திண்டலில் இருந்து ஆனைக்கல்பாளையம் நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். ஈரோடு பூந்துறை ரோடு மூலப்பாளையம் பகுதியில் குழந்தைவேல் சென்று கொண்டு இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்தார்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குழந்தைவேல் சென்றபோது அந்த மர்ம நபர் திடீரென அவரை வழிமறித்தார். பின்னர் தான் வருவாய் துறையில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். மேலும், தங்க நகை போட்டு வர லைசன்ஸ் உள்ளதா?, இல்லையென்றால் மோதிரத்தை கழற்றி சட்டை பாக்கெட்டில் போடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து குழந்தைவேல் தனது விரலில் போட்டிருந்த ½ பவுன் மோதிரத்தை கழற்றி பாக்கெட்டில் போட முயன்றார். அப்போது அந்த நபர் மோதிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு  செய்து மோதிரத்தை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 
வருவாய் துறை அதிகாரி...
இதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (73). இவர் ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் அவரது வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். லக்காபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் சுப்பிரமணியை தடுத்து நிறுத்தினார்.
பின்னர் அந்த நபர் தான் வருவாய் துறை அதிகாரி என கூறியதுடன், திடீரென சுப்பிரமணி அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து சுப்பிரமணி இதுபற்றி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் போல் நடித்து நகையை பறித்த சென்ற சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story