கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
சேலத்தில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் பொதுமக்களும் வீடுகளுக்குள் முடங்கினர்.
சேலம்:-
சேலத்தில் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் பொதுமக்களும் வீடுகளுக்குள் முடங்கினர்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுதவிர ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இந்த பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 6-ந் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுதவிர நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மாவட்டத்தை பொறுத்தவரை சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்பட்டதால் சில உணவகங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. மருந்து கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன.
கடைகள் அடைப்பு
சேலம் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை ஆகிய இடங்களில் உள்ள உழவர் சந்தைகள் நேற்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டன. ஆனால் முழு ஊரடங்கையொட்டி உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் குறைவாக வந்திருந்தனர். மேலும் பெரும்பாலான பொதுமக்கள் முதல்நாளே காய்கறிகளை வாங்கி இருந்ததால் நேற்று உழவர்சந்தைகளுக்கு பொதுமக்கள் குறைவாகவே வந்தனர். இதனால் வியாபாரம் மந்தமாக இருந்தது.
சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட், கடை வீதி, சொர்ணபுரி, சூரமங்கலம், அழகாபுரம், அன்னதானப்பட்டி, அம்மாபேட்டை, திருச்சி மெயின் ரோடு, கொண்டலாம்பட்டி உள்பட மாநகரில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன. பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டும் முழு ஊரடங்கையொட்டி மூடப்பட்டது. இதேபோல் இறைச்சி கடைகளும் திறக்கப்படவில்லை.
சாலைகள் வெறிச்சோடின
நேற்று நள்ளிரவு முதல் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் சாலைகளில் பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லவில்லை. இதனால் மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் கலெக்டர் அலுவலகம் சாலை, புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், 5 ரோடு உள்ளிட்ட சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடின.
சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து 5 ரோடு செல்லும் ஈரடுக்கு மேம்பாலத்தில் போலீசார் தடுப்பு கம்பிகள் வைத்து அடைத்ததால் எந்த வாகனமும் செல்லவில்லை. அரசு பஸ்கள் அனைத்தும் அந்தந்த பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கையொட்டி சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடியது.
போலீசார் பாதுகாப்பு
பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் நேற்று வார விடுமுறையையொட்டி புத்தாடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க பலர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர்.
மாநகரில் முழு ஊரடங்கையொட்டி தேவை இல்லாமல் வெளியே சுற்றித்திரியும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தலைமையில் 650-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தடுப்புகள் வைத்து அடைப்பு
மாநகரில் முக்கிய சாலைகள் தவிர பிற சாலைகள் முழுவதும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. மேலும் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை, உடையாப்பட்டி என மாநகரில் 20 இடங்களில் போலீசார் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அத்தியாவசிய தேவைக்கு செல்பவர்களை போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களிடம் போலீசார் கொரோனா, ஒமைக்ரான் வைரசின் பாதிப்பு குறித்து கூறியதுடன் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சோதனை சாவடிகள்
முழு ஊரடங்கையொட்டி மேட்டூர், கொளத்தூர், ஓமலூர், தாரமங்கலம், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, கெங்கவல்லி, ஏற்காடு உள்பட மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 723 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story