வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி அதிகாரி உள்பட 2 பேர் கைது
தம்மம்பட்டி அருகே ஊரடங்கின் போது மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்களிடம் பணம் வசூலித்த போலி அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தம்மம்பட்டி:-
தம்மம்பட்டி அருகே ஊரடங்கின் போது மோட்டார் சைக்கிளில் சுற்றியவர்களிடம் பணம் வசூலித்த போலி அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊரடங்கில் வாகன சோதனை
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பகுதியில் நேற்று ஊரடங்கையொட்டி போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை மேற்கொண்டனர். அதேபோல் ஆத்தூர் சாலையில் கணவாய் பகுதியில் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து கொண்டு அதிகாரி போல் ஒருவரும், அவருடன் உதவியாளராக ஒருவரும் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த, மோட்டார் சைக்கிள், கார், வேன், லாரி ஆகிய வாகனங்களை வழிமறித்து ஆர்.சி. புத்தகம் மற்றும் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை சரியாக உள்ளதா என அவர்கள் இ்ருவரும் ஆய்வு செய்துள்ளனர். மேலும் சிலரிடம் அவர்கள் அபராதம் வசூலிப்பதாக கூறி பணத்தை பறித்துக்கொண்டு வாகனங்களில் வந்தவர்களை திருப்பி அனுப்பி உள்ளனர்.
போலீசார் விசாரணை
இதனால் சந்தேகம் அடைந்த வாகன ஓட்டிகள் தம்மம்பட்டியில் இருந்த போலீசாரிடம், கணவாய் பகுதியில் போலீஸ் அதிகாரி போன்று நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து 2 பேர் பணம் பறிக்கும் தகவலை தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தம்மம்பட்டி போலீசார் பணம் வசூலித்த அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
போலி அதிகாரி கைது
அப்போது அங்கு காக்கி பேண்டும், வெள்ளை சட்டையும் அணிந்து அதிகாரி போன்று இருந்தவர் உலிபுரம் பகுதியை சேர்ந்த விஜயனின் மகன் ரஞ்சித் குமார் (வயது 39) என்பதும், அவருடன் உதவியாளராக நின்று பணம் வசூலித்தவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சதீஷ் (25) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் அந்த பகுதியில் ஊரடங்கின் போது வாகன ஓட்டிகளிடம் பணத்தை பறித்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 500 ரூபாயை போலீசார் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து ரஞ்சித்குமார் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நேற்று ஊரடங்கு நடைமுறையில் இருந்த போது வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் தம்மம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story