ரூ.1 கோடி கேட்டு சாயப்பட்டறை உரிமையாளர் கடத்தல்


ரூ.1 கோடி கேட்டு சாயப்பட்டறை உரிமையாளர் கடத்தல்
x
தினத்தந்தி 10 Jan 2022 1:40 AM IST (Updated: 10 Jan 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே ரூ.1 கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்:-
ஓமலூர் அருகே ரூ.1 கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாயப்பட்டறை உரிமையாளர்
ஓமலூர் அடுத்த மரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 53). இவருடைய அண்ணன் மகாலிங்கம். இருவரும் சேர்ந்து பங்காளிபட்டியில் சாயப்பட்டறை நடத்தி வருகின்றனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜ் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மரக்கோட்டை அருகே செல்லும் போது காரில் வந்த 3 பேர் இவர் அருகே காரை நிறுத்தி காருவள்ளிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர். 
ரூ.1 கோடி
அப்போது அவர்களின் பின்னால் 2 பேர் மோட்டார் சைக்கிளில் கோவிந்தராஜ் வழி சொல்லும் போது அவரை எதிர்பாராதவிதமாக குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றி சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து அவரை கடத்தி வந்த கும்பல், அவரது அண்ணன் மகாலிங்கத்துக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டி உள்ளது. அதற்கு அவ்வளவு பணம் இல்லை என மகாலிங்கம் கூறவே எதிர்முனையில் பேசிய கடத்தல்காரர்கள்  ரூ.20 லட்சம், ரூ.15 லட்சம் என குறைத்துக்கொண்டே வந்துள்ளனர். 
இதனிடையே இந்த சம்பவம் குறித்து மகாலிங்கம் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஓமலூர் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
5 பேர் கைது
அப்போது கோவிந்தராஜை, ஈரோடு அருகே கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்டனர். மேலும் கடத்தல் கும்பலை சேர்ந்த, சத்தியமங்கலம் அருண், விக்னேஷ், சதீஷ்குமார், ஓசூர் இம்ரான் (22), மேச்சேரி வெங்கடேஷ் (35) ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் மீட்கப்பட்ட சாயப்பட்டறை உரிமையாளரை போலீசார் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 
ஓமலூர் அருகே ரூ.1 கோடி கேட்டு சாயப்பட்டறை உரிமையாளரை கடத்திய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story