ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு; ஊரடங்கை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகளிலும் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகளிலும் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
கொரோனா வைரசின் 3-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பஸ் போக்குவரத்தும் நடைபெறவில்லை. ஆட்டோ, கால் டாக்சியும் பெரும்பாலும் ஓடவில்லை. இதன் காரணமாக முக்கிய ரோடுகள் அனைத்தும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
சோதனை சாவடி
முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை கண்காணிக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கருங்கல்பாளையம் சோதனை சாவடி, பவானி லட்சுமிபுரம் சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, நொய்யல் ஆற்று சோதனை சாவடி என மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் மட்டும் கடும் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டன.
இரும்பு தடுப்புகள்
மேலும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளிய சுற்றிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, காளைமாடு சிலை, சுவஸ்திக் கார்னர் போன்ற முக்கியமான ரோடுகளில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்தனர்.
சில வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பியதையும் பார்க்க முடிந்தது. ஈரோடு மீனாட்சி சுந்தரனார் ரோட்டில் உள்ள மேம்பாலம் அடைக்கப்பட்டு இருந்தது. மாநகர் பகுதியில் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டு உள்ளதா? என்பதை கண்காணிக்க முக்கிய கடை வீதிகளில் போலீசார் ரோந்து சென்றனர்.
Related Tags :
Next Story