குமரியில் நீதிபதி, அதிகாரிக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் நீதிபதி, அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு நாள் பாதிப்பு 200-ஐ நெருங்கியது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நீதிபதி, அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு நாள் பாதிப்பு 200-ஐ நெருங்கியது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் நோய் பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. அதே போல குமரி மாவட்டத்திலும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. வியாபாரிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பு 100-ஐ தொட்டபடி இருந்தது. ஒரே நாளில் தொற்று பரவல் 2 மடங்கு உயர்ந்தது. அதாவது நேற்று முன்தினம் ஆசாாிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், சோதனை சாவடிகள் மற்றும் கள பணியாளர்கள் மூலமாகவும் 3049 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புதிதாக 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நீதிபதி- அதிகாரி
இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 58 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதே போல அகஸ்தீஸ்வரம்-15, கிள்ளியூர்-16, குருந்தன்கோடு-20, மேல்புறம்-11, முன்சிறை-14, ராஜாக்கமங்கலம்-19, திருவட்டார்-12, தோவாளை-11, தக்கலை-22 மற்றும் திருநெல்வேலியில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 199 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் நாகர்கோவில் கோர்ட்டில் பணியாற்றி வரும் மாஜிஸ்திரேட்டு ஒருவருக்கு நேற்று காலை கொரோனா தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் நீதிபதியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.
என்ஜினீயரிங் கல்லூரி
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் படுக்கை வசதிகளை அதிகரிக்கும்படி கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் வார்டு அமைக்கும் பணி நடக்கிறது.
இந்த நிலையில் தற்போது கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியையும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அங்கு கடந்த கொரோனா பரவலின் போது மொத்தம் 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதே போல தற்போதும் 500 படுக்கைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கிருமிநாசினி தெளிப்பு
அதோடு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் கிருமி நாசினி மற்றும் பிளிச்சிங் பவுடர் போடும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. அதிலும் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. நாகர்கோவிலில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story