மாவட்டத்தில் கடைகள் அடைப்பு-வாகன போக்குவரத்து நிறுத்தம்
முழு ஊரடங்கால் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர்.
திருச்சி
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 6-ந் தேதி முதல், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளான என்.எஸ்.பி.ரோடு, பெரியகடைவீதி, சின்னக்கடைவீதி, சிங்காரத்தோப்பு, சத்திரம் பஸ்நிலையம், மத்திய பஸ்நிலையம், உறையூர், தில்லைநகர், சாஸ்திரிரோடு, ஜங்ஷன், கே.கே.நகர், பொன்மலைப்பட்டி, அரியமங்கலம், ஸ்ரீரங்கம் என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊரடங்கில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறந்து இருந்தன.
வீட்டில் முடங்கிய பொதுமக்கள்
முழு ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் ஓடாததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கினர். அத்தியாவசிய தேவைக்கு சென்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. மாநகரில் சுமார் 25 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்தும், ஆங்காங்கே ஹெலி கேமரா மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அபராதம்
தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஒரு சில இடங்களில் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேநேரம் சாலைகள் வெறிச்சோடி கிடந்ததால் சில பகுதிகளில் சிறுவர்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடினார்கள். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட அனைத்து ரெயில்களும் இயங்கியதால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் ஓரளவு இருந்தது.
விமான நிலையம்
திருச்சி விமான நிலையத்துக்கு வழக்கம்போல் விமானங்கள் வந்து சென்றன. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ரெயில் நிலையங்களுக்கும், விமான நிலையத்துக்கும் சொந்த வாகனங்களிலும், வாடகை கார்கள், ஆட்டோக்களிலும் வந்து சென்றனர்.
Related Tags :
Next Story