கர்நாடகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி; பசவராஜ் பொம்மை இன்று தொடங்கி வைக்கிறார்
கர்நாடகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பூஸ்டர் தடுப்பூசி
கர்நாடகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 4.80 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது 99 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டு முடித்துள்ளோம். இதில் 81 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 15 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் இதுவரை 15.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு இருக்கிறோம். இந்த நிலையில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது.
2-வது டோஸ் போட்டு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் முடிவடைந்தவர்களுக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள். இவர்கள் கோவின் செயலியில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். தகுதியானவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த மருத்துவ ஆவணங்களும் தேவை இல்லை. கடந்த முறை எந்த தடுப்பூசி போட்டுக்கொண்டார்களோ அதே தடுப்பூசி தான் இப்போதும் போடப்படும்.
பசவராஜ் பொம்மை
இந்த பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று பெங்களூருவில் உள்ள அடல்பிகாரி வாஜ்பாய் மருத்துவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். தற்போதைய நிலையில் 6 லட்சம் சுகாதார பணியாளர்கள், 7 லட்சம் முன்கள பணியாளர்கள், 60 வயதை கடந்த 8 லட்சம் பேர் என மொத்தம் 21 லட்சம் பேர் இந்த பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதியானவர்கள்.
கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் தான் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள். ஸ்புட்னிக் போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி இல்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை கூறியுள்ளது.
Related Tags :
Next Story