திண்டுக்கல்லில் சுகாதார, முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


திண்டுக்கல்லில் சுகாதார, முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Jan 2022 8:46 PM IST (Updated: 10 Jan 2022 8:46 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் சுகாதார, முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் விசாகன் நேற்று தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பூஸ்டர் ‘டோஸ்’ எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தும் முகாம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கேயே பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்திக்கொண்டார்.
25 ஆயிரம் பேருக்கு மேல்...
இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தற்போது பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் இந்த பூஸ்டர் ‘டோசை’ செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள்.
முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு தற்போது பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்தப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் 25 ஆயிரம் பேருக்கு மேல் பூஸ்டர் ‘டோஸ்’ செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முகாமில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், நகர்நல அலுவலர் இந்திரா, பழனி சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி, கமலா நேரு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஹரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story