மலர் நாற்றுகளை பாதுகாக்க மிலார் செடிகள்
பனியின் தாக்கத்தில் இருந்து மலர் நாற்றுகளை பாதுகாக்க தோட்டக்கலை பூங்காக்களில் மிலார் செடிகள் வைக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி
பனியின் தாக்கத்தில் இருந்து மலர் நாற்றுகளை பாதுகாக்க தோட்டக்கலை பூங்காக்களில் மிலார் செடிகள் வைக்கப்பட்டு வருகிறது.
பனி தாக்கம்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக உறைபனி தாக்கம் நிலவி வந்தது. காலநிலை மாற்றத்தால் உறைபனி தாக்கம் குறைந்து உள்ளது. இருப்பினும் ஊட்டி நகரில் மதியம் வரை வெயில் அடிப்பதுடன், மாலையில் மேகமூட்டமான காலநிலை நிலவுகிறது. இதன் காரணமாக செடிகள் கருக வாய்ப்பு உள்ளது.
எனவே பனி தாக்கத்தில் இருந்து தோட்டக்கலை பூங்காக்களில் மலர், அலங்கார செடிகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற மே மாதம் நடைபெற உள்ள மலர் கண்காட்சியையொட்டி 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது.
பாதுகாக்க மிலார் செடிகள்
மேலும் 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப் பட்டு வருகிறது. இதன் காரணமாக பனி தாக்கத்தில் இருந்து மலர் நாற்றுகளை பாதுகாக்க பூந்தொட்டிகளில் கோத்தகிரி மிலார் செடிகள் வைக்கப்பட்டு உள்ளது.
நடவு செய்த நாற்றுகளை ஒட்டி இந்த செடிகள் உயரமாக வைக்கப்படுவதால் பகல் மற்றும் இரவில் பனியின் தாக்கம் நாற்றுகளை பாதிக்காமல் இருக்கும்.
அத்துடன் நிழல் போன்று இந்த செடிகள் நாற்றுகளை பாதுகாப்பதால் நன்றாக வளர்ந்து பூக்கள் பூக்க வாய்ப்பு உள்ளது.
இதற்காக வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் இருந்து கோத்தகிரி மிலார் செடிகள் சேகரிக்கப்பட்டு பூங்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. பணியாளர்கள் அதனை வெட்டி மலர் நாற்றுகள் மற்றும் செடிகளுக்கு பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரியாக நிலவுவதால், காலை யில் புல்வெளிகளுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
அதே போல் ஊட்டி ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, மலர் நாற்று கள் பனியால் பாதிக்காமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. பனி தாக்கம் அதிகமாக இருக்கும் போது இந்த செடிகள் கருகினால் அதை மாற்றி விட்டு புதிதாக செடிகள் வைக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story