முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம்


முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம்
x
தினத்தந்தி 10 Jan 2022 9:21 PM IST (Updated: 10 Jan 2022 9:21 PM IST)
t-max-icont-min-icon

நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்:
நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
பூஸ்டர் தடுப்பூசி முகாம்
நாகை மாவட்டம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுக்கு, பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
 அப்போது அவர் கூறியதாவது:-
 முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கூடுதலாக (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று (அதாவதுநேற்று) முதல் தொடங்கப்பட்டது.
11 ஆயிரம் பேர் தகுதி
நாகை மாவட்டத்தில் 1,451 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எந்த வகையான (கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின்) தடுப்பூசி செலுத்தப்பட்டதோ அதையே கூடுதல் தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 31.12.2021-ந்தேதி வரை 11 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உள்ளவர்களாக உள்ளனர். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.நாகை மாவட்டத்தில் இதுவரை 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி நிலை அலுவலர் உமாமகேஸ்வரன், கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத்அலி, மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Next Story