ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி மீதான வழக்கை விசாரிக்க 5 பேர் குழு
ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் மீதான வழக்குகளை விசாரிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தேனி:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், அவருடைய மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்து பொய்யான தகவல்களை அளித்ததாக பழனிசெட்டிபட்டியை சேர்ந்த மிலானி என்பவர் புகார் கூறினார்.
இதுகுறித்து அவர், தேனி மாவட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்தார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி உள்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மனுதாரர் மிலானிக்கு பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், அவருடைய பாதுகாப்புக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் ஆகியோர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலகங்கள், மற்றும் சில நிறுவனங்களிடம் விசாரிக்கப்பட உள்ளது. அதுபோல், புகார் அளித்த மிலானியிடமும் விசாரணை நடத்தப்பட்டு அவரிடம் உள்ள ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தப்படும். வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அதுதொடர்பான ஆவணங்கள் சிறப்பு கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது" என்றார்.
Related Tags :
Next Story