அமராவதி அணையில் இருந்து நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
அமராவதி அணையில் இருந்து 2-ம் போக நெல் சாகுபடிக்கு ராமகுளம்-கல்லாபுரம் வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் திறந்துவைத்தார்.
தளி
அமராவதி அணையில் இருந்து 2-ம் போக நெல் சாகுபடிக்கு ராமகுளம்-கல்லாபுரம் வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் திறந்துவைத்தார்.
அமராவதி அணை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக்கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. மழைக்காலங்களில் ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையும் அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் அணைக்கு கைகொடுத்து உதவியது. அத்துடன் அவ்வப்போது சீரான இடைவெளியில் மழைபொழிவும் ஏற்பட்டு வந்ததால் அமராவதி அணையின் நீர்இருப்பு கடந்த 5 மாதங்களாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.
விவசாயிகள் கோரிக்கை
இதையடுத்து 2-ம் போக பாசனத்திற்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ராமகுளம் - கல்லாபுரம் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கடந்த மாதம் 24-ந் தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்ததால் தண்ணீர் திறப்பை தள்ளிவைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவது ஒத்திவைக்கப்பட்டது. அறுவடை பணிகள் நிறைவுற்ற நிலையில் 2-ம் போக சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். அதைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் ராமகுளம்- கல்லாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் திறந்துவைத்தார்
நிகழ்ச்சிக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவைத்தார். இதையடுத்து கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.
அதன்படி நேற்று முதல் வருகிற ஏப்ரல் மாதம் 24-ந் தேதி வரை 281 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 120 நாட்களில் (65 நாட்கள் தண்ணீர் திறப்பு 55 நாட்கள் தண்ணீர் அடைப்பு) உரிய இடைவெளிவிட்டு அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர்இருப்பைப் பொறுத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் 2,834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ.கீதா, செயற்பொறியாளர் முருகேசன், உதவிப்பொறியாளர் பாபுசபரீஸ்வரன், போலீஸ் துணைசூப்பிரண்டு தேன்மொழிவேல், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மலர்விழிபாபு, ஊராட்சி மன்றத்தலைவர்கள் முத்துலட்சுமிபழனிச்சாமி, மாரிமுத்து உள்ளிட்ட பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையில் 88.13 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 358 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 640 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story