விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறிய 836 பேர் மீது வழக்கு
ரூ.1¼ லட்சம் அபராதம் வசூல்
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவல் அதிகரித்து வருவதால் அந்நோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த 6-ந் தேதி இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதுதவிர வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
மேலும் முழு ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றி யாரேனும் வீட்டை விட்டு வெளியே வந்து சாலைகளில் சுற்றித்திரிகின்றனரா? என்பதை கண்காணிக்க போலீசார், முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தேவையின்றி சாலைகளில் சுற்றி வந்த 203 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 10 பேர் மீதும் மற்றும் முககவசம் அணியாமல் வந்த 623 பேர் மீதும் ஆக மொத்தம் 836 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் முககவசம் அணியாமல் வந்த 623 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 600-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 10 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.5 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 600 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story