காய்கறிகள் வாங்க வாரச்சந்தையில் குவிந்த மக்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் வாங்க வாரச்சந்தையில் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறி, பழம், கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில் நேற்று வாரச்சந்தை வழக்கம் போல் இயங்கியது. இதில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை என்பதால், அதற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மண்பானை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர்.
மாடுகளுக்கான கயிறு
அதேபோல் மாட்டு பொங்கல் கொண்டாடும் வகையில் மாடுகளுக்கான பல வண்ண கயிறுகள், மணி உள்ளிட்டவைகளும் விற்பனைக்காக குவிந்திருந்தது. இவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.
மேலும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சென்னை காசிமேடு, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கருவாட்டை வாரச் சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் மீறல்
இதற்கிடையே தற்போது கொடிய கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து இருப்பதால் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இத்தகைய நிலையில் வாரச்சந்தையில் ஒரே நேரத்தில் மக்கள் அதிகளவில் குவிந்து இருந்தது தொற்று பரவலுக்கு மேலும் வழிவகுப்பதாக அமைந்து இருந்தது. ஏனெனில் மக்கள் யாரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை, அதோடு பலர் முககவசமும் அணியாமல் வந்திருந்தனர்.
அபராதம்
இதுபற்றி அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் உத்தரவின்பேரில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விரைந்து சென்று, மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முககவசம் அணிய வலியுறுத்தினர்.
மேலும் முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலித்தனர். அந்த வகையில் 20 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story