கரூர் மாவட்டத்தில் 9,569 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 10 Jan 2022 11:27 PM IST (Updated: 10 Jan 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 9,569 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர், 
பூஸ்டர் தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் திட்டத்தினை உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் உடலுக்கு எந்தவொரு இடர்பாடும் ஏற்படாது என்பதை உறுதி செய்யும் வகையிலும் கலெக்டர் பிரபுசங்கர் முதலில் தானே முன்வந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு இத்திட்டத்தினை தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. 
273 நாட்கள் 
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- இத்திட்டத்தின் கீழ் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் அல்லது 39 வாரம் அல்லது 9 மாதங்கள் முடிந்த நிலையில் உள்ள சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்களப்பணியாளர்களான வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.
9,569 பேர் 
இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் 3 ஆயிரத்து 106 பேரும், முன்களப் பணியாளர்கள் 3 ஆயிரத்து 87 பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3 ஆயிரத்து 376 பேரும் என மொத்தம் 9 ஆயிரத்து 569 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை இதுவரை 93 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசி 64 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என்றார்.

Next Story