காரைக்குடி, தேவகோட்டை பகுதியில் நகரத்தார் காவடி ஊர்வலம்
தைப்பூசத் திருவிழாவையொட்டி காரைக்குடி, தேவகோட்டை பகுதியில் உள்ள நகரத்தார்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
காரைக்குடி,
தைப்பூசத் திருவிழாவையொட்டி காரைக்குடி, தேவகோட்டை பகுதியில் உள்ள நகரத்தார்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
தைப்பூச திருவிழா
ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழாவையொட்டி காரைக்குடி, தேவகோட்டை, ஜெயங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், விரதமிருந்து மாலை அணிவித்து பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பழனிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 18-ந்தேதி அன்று நடக்கிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து பழனிக்கு தற்போது பாதயாத்திரையாக செல்கின்றனர்.
காவடி ஊர்வலம்
இந்த நிலையில் காரைக்குடி பகுதியில் உள்ள நகரத்தார்கள் சார்பில் நேற்று மாலை நகர சிவன் கோவிலில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காவடிகள் புறப்பட்டு கொப்புடைய நாயகி அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், செக்காலை சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்தனர். பின்னர் மீண்டும் இரவு கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் தங்கினர். அதன்பிறகு இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சென்று குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அங்கிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து செல்ல உள்ளனர்.
நாட்டார்கள் காவடி
இதேபோல் தேவகோட்டையில் இருந்து நகரத்தார் காவடி அங்குள்ள நகர பள்ளிக்கூடத்தில் இருந்து புறப்பட்டு நகர் முழுவதும் வலம் வந்து பின்னர் இரவு சிலம்பணி ஸ்ரீசிதம்பர விநாயகர் கோவிலில் தங்கினர். அதன் பின்னர் அங்கிருந்து இன்று காலை புறப்பட்டு சென்று மானகிரி பகுதியில் தங்கியிருந்து மாலை குன்றக்குடி கோவிலுக்கு செல்கின்றனர். இதேபோல் நேற்று ஜெயங்கொண்டான் நிலையில் இருந்து புறப்படும் 100-க்கும் மேற்பட்ட நாட்டார் காவடி முன்னாள் எம்.எல்.ஏ சோழன் சித.பழனிச்சாமி தலைமையில் புறப்பட்டு இரவு சாக்கோட்டை சாக்கை உய்யவந்தம்மன் கோவிலில் இரவு தங்கினர். இன்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு குன்றக்குடி மயிலாடும் பாறை பகுதியில் தங்கியிருந்து மீண்டும் மாலை 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.
Related Tags :
Next Story