லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அரசு வக்கீலுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை
அரசு வக்கீலுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நிறுத்தி வைப்பு
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் குமாரவேல். இவர் பணி நேரத்தில் சக ஊழியர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரின்பேரில் 3 ஆண்டுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைத்து கடந்த 2013-ம் ஆண்டில் கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறுத்தி வைக்கவும், இதை 3 மாதமாக குறைக்கக்கோரியும் அவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அரசு வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, மனுதாரர் எனது உதவியாளர்களை நேரிலும், செல்போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு, இந்த வழக்கில் தனக்கு சாதகமாக நடந்துகொண்டால் எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதாக கூறியுள்ளார் என்றார்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
‘லஞ்சம் இந்த அளவுக்கு விரிவடைந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. மனுதாரர் ஏற்கனவே தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனாலும் தனது வழக்கில் ஆஜராகும் ஐகோர்ட்டு அரசு வக்கீல் பற்றிய விவரத்தை அறிந்து, தனக்கு சாதகமாக நடந்து கொள்ள எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக தைரியமாக கூறியுள்ளார்.
மனுதாரரின் இந்த செயலை கடுமையாக அணுக வேண்டும். கூடுதல் அரசு வக்கீலின் இந்த குற்றச்சாட்டு குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிற 19-ந்தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த தகவலை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்ததுடன், அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த கூடுதல் அரசு வக்கீல் ஏ.கண்ணனை இந்த கோர்ட்டு பாராட்டுகிறது. ஒவ்வொரு அரசு ஊழியரும் தங்களுக்கு லஞ்சம் தர வருபவர்கள் மீது இவ்வாறு செயல்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story