சிலைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு


சிலைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 11 Jan 2022 2:02 AM IST (Updated: 11 Jan 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கைப்பற்றப்பட்ட உலோக சாமி சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

கும்பகோணம்;
கிருஷ்ணகிரியில் கைப்பற்றப்பட்ட உலோக சாமி சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. 
சாமி சிலைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காந்தி ரோடு பகுதி கிருஷ்ணசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் சீர்காழி. இவரது வீட்டில் 2 உலோக சாமி சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையிலான போலீசார், சீர்காழியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 
விசாரணை 
சோதனையில் அவரது வீட்டில் இருந்து 11.12 கிலோ எடையுள்ள சுமார் 51 செ.மீட்டர் உயரமுள்ள விஷ்ணு உலோக சிலை மற்றும் 8.90 கிலோ எடையுள்ள 42 செ.மீட்டர் உயரமுள்ள லட்சுமி உலோக சிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சீர்காழியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைப்பற்றப்பட்ட 2 சாமி சிலைகளையும் தனது தந்தை கோபாலகிருஷ்ணன் அவரது அறையில் வைத்து இருந்ததாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் இறந்ததை தொடர்ந்து இந்த சிலைகளை அவரது அறையிலேயே வைத்திருந்ததாகவும் இந்த சிலைகள் குறித்து தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ எந்த தகவலும் தெரியாது எனவும் போலீசாரிடம் சீர்காழி கூறினார். 
பாதுகாப்பாக வைக்க உத்தரவு
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை போலீசார் சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று நீதிபதி சண்முகப்பிரியா முன்பு ஒப்படைத்தனர். போலீசார் கொடுத்துள்ள தகவலின்படி 2 உலோக சிலைகளின் எடை மற்றும் உயரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த நீதிபதி சண்முகப்பிரியா இந்த 2 சிலைகளையும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் செயல்பட்டு வரும் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையிலான போலீசார் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையத்துக்கு நேரில் சென்று கைப்பற்றப்பட்ட சாமி சிலைகளை பாதுகாப்பாக வைத்தனர்.

Next Story