மந்திரி மகனின் போலி வீடியோ வெளியான விவகாரம்; தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது


மந்திரி மகனின் போலி வீடியோ வெளியான விவகாரம்; தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2022 2:35 AM IST (Updated: 11 Jan 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி மகனின் போலி வீடியோ வெளியான விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: மந்திரி மகனின் போலி வீடியோ வெளியான விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோதிடரின் மகன் கைது

கர்நாடகத்தில் கூட்டுறவுத்துறை மந்திரியாக இருந்து வருபவர் சோமசேகர். இவர், பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் ஆவார். இவரது மகன் நிசாந்த். இவர், ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற போலியான வீடியோவை தயாரித்து, மந்திரி சோமசேகரின் உதவியாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க பல கோடி ரூபாய் கேட்டு மர்மநபர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். இதுகுறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு பெங்களுரு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. மேலும் மந்திரியின் மகன், இளம்பெண்ணுடன் இருப்பது போன்று போலி வீடியோ தயாரித்து இருந்த பிரபல ஜோதிடரின் மகனான ராகுல் பட் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்தும் விசாரித்து வருகின்றனர்.

மகளுக்கு தொடர்பு இல்லை

இந்த சம்பவத்தில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண் மற்றும் மந்திரியின் உதவியாளருக்கு வீடியோ அனுப்பி வைத்த சிம்கார்டு எண், விஜயாப்புரா மாவட்டம் இன்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான யஷ்வந்த ராயகவுடா பட்டீலின் மகள் பெயரில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்திருந்தனர். ஆனால் தனது மகளுக்கும், மந்திரியின் மகனுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு தொடர்பு இல்லை என்று யஷ்வந்த ராயகவுடா பட்டீல் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகளிடம் போலீசார் விசாரித்தும் தகவல்களை பெற்றுள்ளனர். அதே நேரத்தில் எம்.எல்.ஏ.வின் மகள் தனது சிம் கார்டுவை தனது பள்ளி நண்பரான ராகேசிடம் கொடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ராகேசை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் ராகுல் பட்டிடம் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

3 பேர் கைது

இந்த நிலையில், மந்திரி மகனிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மந்திரி மகனுக்கு எதிராக போலி வீடியோ தயாரிக்க இந்த 3 பேரும் உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, கைதான 3 பேர் மற்றும் ராகுல் பட்டிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதே நேரத்தில் மந்திரி மகனுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?, இந்த வழக்கு பின்னணியில் மூளையாக செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story