கொரோனா அதிகரிப்பு அச்சத்தால் ரெயில்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்
கொரோனா அதிகரிப்பு அச்சத்தால் ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் திரும்புகின்றனர்.
சேலம்,
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் பீகார், ஒடிசா, ஆந்திரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்பட பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்கியிருந்து கட்டுமான நிறுவனங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவிய போது பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் வடமாநில தொழிலாளர்கள் பலர் வேலையின்றி தவித்தனர். இதையடுத்து அந்த தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மற்றும் பஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும் மீண்டும் அவர்கள் சேலம் மாவட்டத்துக்கு திரும்ப வந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊருக்கு திரும்புகின்றனர்
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் ஆகிய வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் இந்த பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பதற்கு முன்பாகவும், கடந்த ஆண்டை போல இங்கு தங்கியிருந்து வேலையின்றி கஷ்டப்பட கூடாது என்பதற்காகவும் வடமாநில தொழிலாளர்கள் பலர் தற்போது ரெயில்கள் மூலம் ஊருக்கு திரும்புகின்றனர்.
கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில நாட்களாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.
Related Tags :
Next Story