பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயற்சி இந்து மக்கள் கட்சி தலைவர் உள்பட 20 பேர் கைது


பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து  சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயற்சி இந்து மக்கள் கட்சி தலைவர் உள்பட 20 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2022 2:59 AM IST (Updated: 11 Jan 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பை பஞ்சாப் காங்கிரஸ் அரசு வழங்க தவறியதாக கூறி அதை கண்டித்து சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூரமங்கலம், 
போராட்டம்
காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 5-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றார். ஆனால் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடியால் அந்த நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்ளவில்லை. 
இந்த நிலையில் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்க பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக கூறி அதை கண்டித்து நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு திரண்டனர். 
இந்த போராட்டத்தையொட்டி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, உதவி கமிஷனர் நாகராஜன், சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
சாலை மறியல்
இதையடுத்து இந்து மக்கள் கட்சியினர் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கண்டிப்பதாக கூறி கோஷமிட்டதுடன் அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ரெயில் மறியலுக்கு செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ரெயில் மறியலுக்கு முயன்ற அர்ஜூன் சம்பத் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். 
முன்னதாக அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறும்போது, ‘பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு பிரதமருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறி விட்டது. இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.

Next Story