ஊரடங்கு, கொரோனா விதிமுறைகளை மீறி பாதயாத்திரை; டி.கே.சிவக்குமார் உள்பட 31 பேர் மீது வழக்கு
ஊரடங்கு மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறி பாதயாத்திரை நடத்திய சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு: ஊரடங்கு மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறி பாதயாத்திரை நடத்திய சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தடையை மீறி பாதயாத்திரை
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 9-ந் தேதி பாதயாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவல், வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பாதயாத்திரைக்கு, ராமநகர் மாவட்ட கலெக்டர் தடைவிதித்திருந்தார். மேலும் ராமநகர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டு இருந்தது.
ஆனாலும் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவை மீறி கடந்த 9-ந் தேதி திட்டமிட்டபடி கனகபுரா தாலுகா காவிரி சங்கமத்தில் இருந்து பெங்களூருவை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் பாதயாத்திரை தொடங்கினார்கள். ஊரடங்கு அமலில் இருப்பதால், சங்கமம் பகுதியில் வைத்தே காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியானது.
சட்டப்படி நடவடிக்கை
ஆனால் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. சங்கமத்தில் தொடங்கிய பாதயாத்திரை நேற்று 2-வது நாளாகவும் நடந்தது. இதற்கிடையில், ஊரடங்கு உத்தரவை மீறி பாதயாத்திரை நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தடையை மீறி பாதயாத்திரை நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ராமநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனைக்கு பின்பு ஊரடங்கு உத்தரவு, கொரோனா விதிமுறைகளை மீறி பாதயாத்திரை நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சாத்தனூர் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு கிரீஷ் உத்தரவிட்டார்.
31 பேர் மீது வழக்குப்பதிவு
இதையடுத்து, சாத்தனூர் போலீஸ் நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறியதாக என்.டி.எம்.ஏ. (பேரழிவு மேலாண்மை சட்டம்) சட்டப்பிரிவின் கீழ் 31 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 141(அரசு தனது கடமையை செய்யவிடாமல் தடுத்தல்), 143(சட்டவிரோதமாக கூடுதல்), 290(பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல்), 336(பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கூட்டமாக கூடுதல்), 149(சட்டவிரோதமாக கூட்டத்தை கூட்டுதல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதில், டி.கே.சிவக்குமார் பெயர் முதல் பெயராகவும், சித்தராமையாவின் பெயர் 2-வதாகவும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சுரேஷ் எம்.பி, முன்னாள் மந்திரிகள் ஜெயமாலா, உமாஸ்ரீ உள்ளிட்ட தலைவர்கள் மீதும், நடிகர்கள் துனியா விஜய், சாது கோகிலா உள்ளிட்டவர்களின் பெயர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருப்பதாக ராமநகர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா விதிகளை மீறி பாதயாத்திரை நடத்தி வரும் காங்கிரசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சுகாதார துறையின் கடமை
சட்டவிரோதமாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ள மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டு உள்ளவர்களின் உடல்நிலையை கண்டு அரசு கவலை கொண்டுள்ளது. நீண்டதூரம் நடப்பவர்களின் உடல்நிலையை கவனித்து கொள்வது சுகாதாரத்துறையின் கடமை.
அதனால் பாதயாத்திரையில் பங்கேற்று உள்ளவர்கள் சுகாதாரத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் சரி அதாவது பெரிய தலைவராக இருந்தாலும் சரி, சாமானிய மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில் அரசு பாரபட்சம் பார்க்காது.
தீவிரமான நடவடிக்கைகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று (நேற்று முன்தினம்) 12 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 6.8 ஆகவும், பெங்களூருவில் 10 ஆகவும் உள்ளன. கொரோனா பாதிப்பில் கர்நாடகம் 3-வது இடத்தில் உள்ளது. அதனால் அதிக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story