காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது


காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது
x
தினத்தந்தி 11 Jan 2022 3:01 PM GMT (Updated: 11 Jan 2022 3:01 PM GMT)

ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.

ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.
காய்கறி மார்க்கெட்
ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடைகள் உள்ளன. இரவில் மொத்த வியாபாரமும், பகலில் சில்லரை வியாபாரமும் நடக்கிறது.
அந்தியூர், தாளவாடி, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
விலை குறைந்தது
கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. பெரும்பாலான காய்கறிகளின் விலை ஒரு கிலோ ரூ.100-க்கும் மேல் அதிகரித்து விற்பனை ஆனது. குறிப்பாக தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் மழை பொழிவு குறைந்திருப்பதால் மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விலையும் சற்று குறைந்து உள்ளது.
கத்தரிக்காய்
கடந்த சில நாட்களாக கிலோ ரூ.100-க்கு விற்ற கத்தரிக்காய் நேற்று ரூ.50 ஆக குறைந்தது. இதுபோல் மற்ற காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை குறைந்து உள்ளது.
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
வெண்டைக்காய் - ரூ.60, முள்ளங்கி - ரூ.20, பீர்க்கங்காய் - ரூ.50, பாகற்காய் - ரூ.50, சுரைக்காய் - ரூ.20, முட்டைகோஸ் - ரூ.40, புடலங்காய் - ரூ.30, கேரட் - ரூ.90, பீட்ரூட் - ரூ.80, முருங்கைக்காய் - ரூ.250, காளிபிளவர் - ரூ.30, உருளைக்கிழங்கு - ரூ.30, சின்ன வெங்காயம் - ரூ.60, பெரிய வெங்காயம் - ரூ.40, தக்காளி - ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டது.

Next Story