ஊட்டியில் 5 போலீசாருக்கு கொரோனா
ஊட்டியில் போலீசார் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. போலீஸ் குடியிருப்பு தனிமைப்படுத்தி மூடப்பட்டது. மேலும் 16 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டியில் போலீசார் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. போலீஸ் குடியிருப்பு தனிமைப்படுத்தி மூடப்பட்டது. மேலும் 16 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அனுமதியின்றி செல்ல தடை
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50-க்கும் கீழ் இருந்தது. தற்போது 300-ஐ நெருங்கி உள்ளது.
நீலகிரியில் ஒரே தெரு அல்லது பகுதியில் 3 பேருக்கு கொரோனா உறுதியானால் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் ஊட்டியில் நட்சத்திர விடுதிகள் உள்பட 3 இடங் கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
மொத்தம் 16 இடங்கள் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அனுமதி இல்லாமல் உள்ளே யாரும் செல்லக்கூடாது. வெளியே வரக்கூடாது என்று பேனர் வைக்கப்பட்டு உள்ளது.
5 போலீசாருக்கு கொரோனா
இந்த நிலையில் ஊட்டி புதுமந்து போலீஸ் குடியிருப்பில் 5 போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 3 பேர் என மொத்தம் 8 பேருக்கு தொற்று பாதித்து உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் 50 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து போலீஸ் குடியிருப்பு தனிமைப் படுத்தப்பட்டு தடுப்பு வைத்து மூடப்பட்டது. ஊட்டி நகராட்சி மூலம் கிருமிநாசினி தெளித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் போன்ற சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
27 பேருக்கு பரிசோதனை
நீலகிரிக்கு வெளிநாடுகள் மற்றும் வெளியிடங்களில் இருந்து வந்த 27 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இதை அறிய அவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் முடிவு இன்னும் வரவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
173 பேர் வீட்டுதனிமை
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:- நீலகிரியில் கொரோனா பாதிப்பு உறுதியாகி லேசான அறிகுறிகளுடன் உள்ள 173 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். அவர்கள் தனி அறையில் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து நீலகிரி திரும்பிய 121 பேர் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் 32 பேர் தவிர்த்து மீதமுள்ள அனைவருக்கும் 8-வது நாள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.தற்போது நோய் பரவல் அதிகமாக உள்ளதால் தினமும் 1,500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஊட்டி தனியார் பள்ளியில் 189 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. அங்கு தொற்று பாதித்த 56 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் 0.6 சதவீதம் இருந்தது.
தற்போது 9 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அடுத்த மாதம் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். நீலகிரியில் கொரோனா சிகிச்சை மையங்களில் 1,130 படுக்கை வசதிகள், அரசு, தனியார் மருத்துவமனைகளில் 600 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story