வேடசந்தூர் அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி


வேடசந்தூர் அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 11 Jan 2022 4:07 PM GMT (Updated: 2022-01-11T21:37:50+05:30)

வேடசந்தூர் அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.

வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சீனிராவுத்தர் தெருவை சேர்ந்தவர் ஜாபர். அவருடைய மகன் முகமதுசல்மான் (வயது 19). இவர், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை முகமதுசல்மான், அவரது உறவினர் ரியாசுடன் (19) திண்டுக்கல் வந்தார். பின்னர் அவர்கள் இரவு வேடசந்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை முகமது சல்மான் ஓட்டினார். பின்னால் ரியாஸ் அமர்ந்திருந்தார்.
திண்டுக்கல்- கரூர் நான்கு வழிச்சாலையில் விட்டல்நாயக்கன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது சல்மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரியாஸ் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த ரியாசை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

Next Story