மேல்மலையனூர் அருகே துணிகரம் தலைமை ஆசிரியை உள்பட 2 பேரின் வீடுகளில் 60 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மேல்மலையனூர் அருகே தலைமை ஆசிரியை உள்பட 2 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
மேல்மலையனூர்,
தலைமை ஆசிரியை
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள அவலூர்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). கோவில்புரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி விஜயா (55). தாயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு, வெளியூரில் உள்ள மகனை பார்க்க சென்றனர். பின்னர் அவர்கள் இருவரும் நேற்று காலை வீடு திரும்பினர்.
நகை-பணம் கொள்ளை
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 34 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.
கணவன்-மனைவி இருவரும் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்
அவலூர்பேட்டை முருங்கை மர தெருவை சேர்ந்தவர் மணி(68). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் தங்கி மணியை கவனித்து வருகிறார்கள்.
இதைநோட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு மணியின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மேற்கண்ட 2 வீடுகளில் கொள்ளைபோன நகை, பணத்தின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இது குறித்து தனித்தனி புகாரின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி, அவலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொள்ளை நடந்த 2 வீடுகளையும் பார்வையிட்டனர்.
இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சாய்னா, கொள்ளை நடந்த வீடுகளில் இருந்து அவலூர்பேட்டை கடைவீதி வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் 2 வீடுகளில் பதிவான மர்மநபர்களின் ரேகைகள், தடயங்களை சேகரித்துச் சென்றனா்.
இந்த குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஒரேநாளில் அடுத்தடுத்து பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 2 பேரின் வீடுகளில் மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story