ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் எந்தவித குறைபாடும் இல்லாமல் வழங்க வேண்டும் விற்பனையாளர்களுக்கு அமைச்சர் உத்தரவு


ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் எந்தவித குறைபாடும் இல்லாமல் வழங்க வேண்டும் விற்பனையாளர்களுக்கு அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 11 Jan 2022 11:18 PM IST (Updated: 11 Jan 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் எந்தவித குறைபாடும் இல்லாமல் வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

தர்மபுரி:
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் எந்தவித குறைபாடும் இல்லாமல் வழங்க வேண்டும் என்று தர்மபுரியில் ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் முழு நீள கரும்புடன் 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தரம் குறைவாக உள்ளதாகவும், ஒரு சில பொருட்களின் எடை குறைவாக உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் வந்தது.
இதனைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், எடை அளவு குறையாமலும் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் பொருட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தர்மபுரி இலக்கியம்பட்ட, ராஜாப்பேட்டை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர் திவ்யதர்சினி ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பின் விவரங்களை அமைச்சரிடம் விளக்கமாக தெரிவித்தார். 
விற்பனையாளர்களுக்கு உத்தரவு
அப்போது பொதுமக்கள் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து அமைச்சர் சோதனை செய்தார். பொருட்களின் தரம் மற்றும் எடை ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர்களிடம், பொங்கல் பரிசு தொகுப்பில் எந்தவித குறைபாடும் இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.
அப்போது அமைச்சர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 4,61,543 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு நீள கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.24.83 கோடி செலவில் வழங்கப்படுகின்றது. குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் பெற்று கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தர்மச்செல்வன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் அன்பழகன், நாட்டான் மாது, தங்கமணி, ராஜா, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் சேட்டு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story