ஊரக வளர்ச்சி துறையினர் ஒரு நாள் விடுப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சி துறையினர் ஒரு நாள் விடுப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2022 11:21 PM IST (Updated: 11 Jan 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறையினர் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறையினர் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.
ஒரு நாள் விடுப்பு போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம், செம்பனார்கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 600-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பாலான அலுவலர்கள் விடுப்பு எடுத்து பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த 2 ஆண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிர்வாக நிதியினை காலதாமதமின்றி வட்டாரங்களுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி
சீர்காழியில்  ஊரக வளர்ச்சித்துறையில் பணி புரியும் ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்), பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள், இளநிலை எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவரும் நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் முதல் பணியாளர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடியது. இந்த போராட்டத்தால் அரசு வீடு கட்டும் பயனாளிகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் முற்றிலும் தடைபட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்தோடு அலுவலகத்திற்கு வந்து திரும்பி சென்றனர். இந்த போராட்டத்தால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
கொள்ளிடம்
கொள்ளிடம் ஊராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் 42 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட 83 பேர் நேற்று பணிக்கு வராமல் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற வேண்டிய அனைத்து பணிகளும் நடைபெறவில்லை. இதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பணியாளர்களும் நேற்று வேலைக்கு செல்லவில்லை. இதேபோல் குத்தாலம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story