திருமணத்துக்காக நகைபறிப்பில் ஈடுபட்ட இளம்பெண். நூதன முறையில் மூதாட்டியிடம் 2¼ பவுன் தங்க சங்கிலி அபேஸ்


திருமணத்துக்காக நகைபறிப்பில் ஈடுபட்ட இளம்பெண். நூதன முறையில் மூதாட்டியிடம் 2¼ பவுன் தங்க சங்கிலி அபேஸ்
x
தினத்தந்தி 11 Jan 2022 11:21 PM IST (Updated: 11 Jan 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் தனியார் மருத்துவமனையில் நூதன முறையில் மூதாட்டியிடம் 2¼ பவுன் தங்க சங்கிலி அபேஸ் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருமணத்துக்காக நகைபறிப்பில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் தனியார் மருத்துவமனையில் நூதன முறையில் மூதாட்டியிடம் 2¼ பவுன் தங்க சங்கிலி அபேஸ் செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். திருமணத்துக்காக நகைபறிப்பில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

மூதாட்டியிடம் தங்கசங்கிலி அபேஸ்

அணைக்கட்டு அருகே உள்ள பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமபதியம்மாள் (வயது 80). இவர் உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். டாக்டரின் ஆலோசனைப்படி அங்குள்ள எக்ஸ்ரே அறையின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். 

அப்போது நர்சு உடை அணிந்திருந்த இளம்பெண் அங்கு வந்து அவரிடம் பேச்சு கொடுத்தார். அவரிடம் எக்ஸ்ரே எடுப்பதற்காக நின்று கொண்டிருப்பதாக ராமபதியம்மாள் தெரிவித்தார். அதற்கு இளம்பெண், எக்ஸ்ரே எடுக்கும்போது நகை எதுவும் அணிந்திருக்க கூடாது. எனவே அவற்றை கழட்டி கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
 
கழற்றி கொடுத்தார்

அந்த இளம்பெண் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சு தான் என்று நம்பிய ராமபதியம்மாள் அவர் அணிந்திருந்த 2‌¼ பவுன் சங்கிலியை கழட்டி கொடுத்தார். இளம்பெண் மூதாட்டியின் மணிபர்சை வாங்கி, அதில் தங்கசங்கிலியை வைத்து விட்டதாக கூறி அதனை திரும்ப கொடுத்துள்ளார். 

சிறிதுநேரத்துக்கு பின்னர் ராமபதியம்மாள் மணிபர்சை திறந்து பார்த்தார். அதில், தங்கசங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மருத்துவமனை ஊழியர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி அந்த இளம்பெண் குறித்து கேட்டார். எக்ஸ்ரே பிரிவில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பெற்ற நர்சு வேலை பார்க்காதது தெரிய வந்தது.

இளம்பெண் கைது

இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலவெங்கடராமன் வழக்குப்பதிந்தார். பின்னர் தனியார் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். 

கேமராவில் நர்சு உடை அணிந்த இளம்பெண் மூதாட்டியிடம் தங்கசங்கிலி வாங்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதையடுத்து அந்த நர்சு மருத்துவமனை வளாகத்தில் உள்ளாரா என்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு அவர் இல்லை.
மடக்கிப்பிடித்தனர்

இந்த நிலையில் இளம்பெண் நர்சு உடையணிந்து மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனை வளாக காவலர்கள் அவரை மடக்கி பிடித்து, போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
விசாரணையில், அவர் காட்பாடி தாலுகா திருமணியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் என்பதும், பி.எஸ்சி. நர்சிங் முடித்து விட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்தாண்டு வேலை செய்ததும், தற்போது வேலை இல்லாமல் தவித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், அதற்காக நகை பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

அதையடுத்து இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 2¼ பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story