ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி


ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி
x
தினத்தந்தி 11 Jan 2022 11:32 PM IST (Updated: 11 Jan 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் என்ஜினீயரிங் பட்டதாரி ஒருவர் குறுங்காடு வளர்த்து வருகிறார்.

குத்தாலம்:
குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் என்ஜினீயரிங் பட்டதாரி ஒருவர் குறுங்காடு வளர்த்து வருகிறார். 
விவசாயம் மீது ஆர்வம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது45). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டவர் ஆவார். இந்த நிலையில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் குறுங்காடு வளர்க்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் குறுங்காட்டை எந்த முறையில் வளர்ப்பது என இணையதளத்தில் தேடினார். அப்போது ‘மியாவாக்கி’ எனப்படும் ஜப்பானிய குறுங்காடு வளர்ப்பு முறை அவரை கவர்ந்தது. அந்த முறையை பற்றி நன்றாக படித்து தெரிந்து கொண்ட அவர் அதற்கான முனைப்புடன் களமிறங்கினார். 
ஜப்பானிய முறைப்படி தனது நிலத்தை சுற்றிலும் ஆழமாக குழி வெட்டி அதில் 3 அடுக்குகளாக உரமிடும் பணிகளை மேற்கொண்டார். தென்னை மட்டை, மண்புழு, கடலை தோல், மரத்தூள், தழை உரம், மற்றும் இலைகளுடன் அசோஷ், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா உரக்கலவைகளை போட்டார். 
பழவகை மரங்கள்
பின்னர் ஒன்றுக்கு ஒன்று இடைவெளியில் நெட்டை, குட்டை என 40 வகையான மரங்களையும், பழவகை மரங்களையும், மூலிகைச்செடிகளையும் நட்டு வளர்த்து வருகிறார். பயிரிட்ட ஒரு ஆண்டில் குறுங்காட்டில் மரங்கள் நன்றாக வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாது என நம்பிக்கையுடன் கூறுகிறார் ரவிக்குமார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஜப்பானிய குறுங்காடு வளர்ப்பு முறையில் சந்தனம், இலுப்பை, தேக்கு, குமிழ் தேக்கு, ரோஸ்வுட் தேக்கு, வேங்கை, மகாகனி, போன்ற மரங்களையும், விக்ஸ் துளசி, கருந்துளசி, கருநொச்சி, பெரியாநங்கை, சிறியாநங்கை, கத்தாழை, பவளமல்லி, வில்வம், மருதம் போன்ற மூலிகை வகை செடிகளையும், பப்பாளி, நாவல், நெல்லி, சீதா, சப்போட்டா, இலந்தை, எலுமிச்சை, மாதுளை, கொய்யா, அத்தி, ஆரஞ்சு போன்ற பழவகை மரங்களையும் வளர்த்து வருகிறேன். 
மழைப்பொழிவு
இந்த குறுங்காட்டில் பறவைகள் பலவும் வந்து தங்கி செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அதன் கழிவுகள் மரங்களுக்கு உரமாவதுடன், மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்திலேயே அதிக மழைப்பொழிவு உள்ள பகுதியாக பாலையூரை மாற்றி காட்டுவதே என லட்சியம்’ என்றார். 

Next Story