விசைத்தறி தொழிலாளர் பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது. இன்று முடிவுக்கு வருமா என்ற எதிர்பாப்பில் தொழிலாளர்கள் உள்ளனர்.
குமாரபாளையம்:-
குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் பொங்கல் போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது. இன்று முடிவுக்கு வருமா என்ற எதிர்பாப்பில் தொழிலாளர்கள் உள்ளனர்.
விசைத்தறி தொழிலாளர்கள்
குமாரபாளையம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இங்கு பணிபுரியும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீத பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பிலும், தொழிற்சங்கங்கள் தரப்பிலும் 2 கட்ட பேச்சுவார்த்தையை அதிகாரிகள் நடத்தினர். இதில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தை
இதற்கிடையே நேற்று மாலை 3 மணி அளவில் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் தமிழரசி தலைமை தாங்கினார். பேச்சுவார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் கொங்கு பவர்லூம் உரிமையாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன், பொருளாளர் சுந்தர்ராஜன், நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் பூபதி ஆகியோரும் பங்கேற்றனர்.
தொழிற்சங்கம் தரப்பில் ஏ.ஐ.சி.சி.டி.யு. அமைப்பின் செயலாளர் சுப்பிரமணியம், கதிரவன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் அசோகன், பாலுசாமி, இடதுசாரி தொழிற்சங்க முன்னணி சார்பில் கோவிந்தராஜன், சரவணன் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
அரசு நிர்ணயித்த போனஸ்
விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் பேசும்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரானா நோய் பாதிப்பால் விசைத்தறி தொழில் பெரும் முடக்கத்தை சந்தித்துள்ளது. எனவே 8 சதவீத போனஸ் தான் வழங்க முடியும் என கருத்து தெரிவித்தனர். தொழிற்சங்கம் தரப்பில் இந்த காலத்தில் அனைத்துப் பொருட்களும் விலைவாசி உயர்ந்து விட்டது. விசைத்தறி தொழிலை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்கள் அன்றாட பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறோம். எனவே 20 சதவீத போனஸ் வேண்டும் என்று வாதிட்டனர்.
இரு தரப்பு கருத்துக்களையும் கேட்ட தாசில்தார் தமிழரசி மற்றும் துயர் துடைப்பு தாசில்தார் சிவக்குமார் ஆகியோர்,. உலகமே கொரானா நோயால் பாதித்து வரும் சூழலில் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச போனஸ் வழங்க வேண்டும் என்று தங்களது அறிவுரையை கூறினார். முதலாளி தரப்பிலும் தொழிலாளர்கள் தரப்பிலும் தங்கள் குழுவிடம் ஆலோசித்து முடிவை தெரிவிப்பதாக கூறினர்.
இறுதிகட்ட பேச்சு
தொடர்ந்து இன்று (புதன்கிழமை) பகல் 12 மணி அளவில் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இந்த போனஸ் பேச்சுவார்த்தை முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பில் விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story