கால்வாய் சீரமைப்பு பணியால் தண்ணீர் விடுவதும் நிறுத்தம்


கால்வாய் சீரமைப்பு பணியால் தண்ணீர் விடுவதும் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Jan 2022 1:45 AM IST (Updated: 12 Jan 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

குற்றியாணியில் கால்வாய் சீரமைப்பு பணியால் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பணியை விரைவில் முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குலசேகரம், 
குற்றியாணியில் கால்வாய் சீரமைப்பு பணியால் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பணியை விரைவில் முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழையால் கால்வாய் உடைப்பு
குமரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் கனமழையால் பேச்சிப்பாறை அணையின் பிரதான கால்வாயான கோதையாறு இடது கரைக்கால்வாயில் புத்தன்அணை அருகே குற்றியாணி பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. அத்துடன் கால்வாயின் அருகே செல்லும் பெருஞ்சாணி சாலையும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து கால்வாய் மற்றும் சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது. சாலை சீரமைப்பு பணி கடந்த மாதம் முடிந்தது. 
ஆனால் கால்வாய் சீரமைப்பு பணி இதுவரை நிறைவடையவில்லை. இதனால் மழை ஓய்ந்து ஒரு மாத காலத்திற்கு மேலாகியும் பேச்சிப்பாறை அணையில் இருந்து இந்த கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, கால்வாய் சீரமைப்பு பணியை விரைவில் முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவசர கால மதகுகள்
இதுகுறித்து முன்னோடி விவசாயி பி. ஹென்றி கூறியதாவது:-
கோதையாறு இடது கரைக்கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சுமார் 2 மாத காலமாகியும் சீரமைக்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் ஜூன், ஜூலை மாதங்களில் அல்லது அதற்கு முன்பாக கனமழை பெய்தால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வீணாக தண்ணீரை மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்ற வேண்டிய சூழல் உருவாகும். எனவே இந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் கால்வாயில் உடைப்பு ஏற்படாத வகையில் புத்தன் அணைக்கும், குற்றியாணி பகுதிக்கும் இடையில் தண்ணீரை வெளியேற்றும் வகையில் அவசரகால மதகுகள் அமைக்க வேண்டும், என்றார்.
2 வாரத்தில் நிறைவடையும்
இதுகுறித்து பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோதையாறு இடதுகரைக் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணிகள் ரூ.60 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 வார காலத்திற்குள் நிறைவடைந்துவிடும். தற்போது, பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கால்வாயில் குற்றியாணி பகுதியில் அவசர கால மறுகால் மதகு ஒன்று அமைக்கும் திட்டமும், இடைக்கட்டான்காலை பகுதியிலுள்ள மதகுகளை மழைக்காலங்களில் திறக்கும் திட்டமும் உள்ளது, என்றார்.

Next Story