போலீஸ் என்று கூறி லாரி டிரைவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது


போலீஸ் என்று கூறி லாரி டிரைவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2022 8:46 PM GMT (Updated: 11 Jan 2022 8:46 PM GMT)

போலீஸ் என்று கூறி லாரி டிரைவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சமயபுரம்:
லால்குடியில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்துகொண்டிருந்தது. லாரியை ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ெவங்கட்ராமன்(35) ஓட்டினார். லால்குடி அருகே உள்ள மேலவாளாடி அருகே வந்தபோது 2 பேர் லாரியை வழிமறித்து தாங்கள் போலீஸ் என்று கூறி, அதிக சரக்கை ஏன் ஏற்றி வந்தாய் என்று கேட்டு, ஆவணங்களை காட்டுமாறு கூறி, பணம் எவ்வளவு உள்ளது என்று கேட்ட அவர்கள் டிரைவரிடம் இருந்த ரூ.700-ஐ பெற்றுக்கொண்டு லாரியை சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வருமாறு கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அருகே இருந்த ஒரு போலீஸ்காரரிடம் நடந்த சம்பவம் குறித்து வெங்கட்ராமன் கூறினார். இது குறித்த தகவலின் பேரில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் அங்கு வந்து அவர்களை தேடினர்.
அப்போது அவர்கள் 2 பேரும் ஒரு கடையில் மது அருந்தி கொண்டிருந்ததைப் பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் லால்குடியை சேர்ந்த கார் டிரைவர்களான மணிகண்டன் (வயது 36), சுரேஷ் (வயது 40) என்பதும், போலீஸ் என கூறி டிரைவரிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் நேற்று இரவு அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story