புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 11 Jan 2022 10:07 PM GMT (Updated: 11 Jan 2022 10:07 PM GMT)

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா மேல மானாகரை கிராமத்தின் வயல்வெளிகளில் தாழ்வான நிலையில் மின்கம்பிகள் செல்கின்றன. மின்கம்பத்தின் வயர்கள் தாழ்வாக செல்வதால்  வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் மழை காலங்களில் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
- ராஜ்குமார், மேலமானாகரை.
தண்ணீர்தொட்டி தேவை
  மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகில் உள்ள மூணூர் கிராமத்தில் தண்ணீர் சேமிக்கும் தொட்டி 2 அமைந்துள்ளது. தற்போது அதன் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டு முற்றிலும்  சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அதிக அளவில் நீர் கசிந்து வருகிறது. அன்றாட தேவைக்கும் குடிநீருக்கும் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி புதிய தண்ணீர்ெதாட்டி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
பொதுமக்கள், மதுரை.
சுகாதார சீர்கேடு 
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் பகுதியிலுள்ள ஜான்சிராணி தெருவில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடான நிலை உள்ளதுடன் துர்நாற்றமும் வீசுகிறது.  கொசுக்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. எனவே தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நாய்கள் தொல்லை
  மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா சித்தூர் கிராமத்தில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்பவர்களை கடித்தும் அச்சுறுத்தியும் வருகின்றன. இதனால் பெண்கள், குழந்ைதகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இந்த நாய்களால் சில சமயங்களில் வாகன விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராமகிருஷ்ணன், மதுரை.
சேதமடைந்த சாலை 
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள தார்சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
விபத்தை ஏற்படுத்தும் குழிகள் 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சில இடங்களில் மின்கம்பங்களை மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மின் கம்பம் மாற்றுவதற்காக குழிகள் தோண்டப்பட்டன. இதனால் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இப்பகுதியில் தினமும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் செல்லக்கூடியவர்கள் குழிக்குள் விழுந்து விபத்து ஏற்படும் நிலை இருந்து வருகிறது. எனவே விபத்து எதுவும் ஏற்படுவதற்கு முன்னர் குழிகளை மூட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கீழக்கரை.
பஸ் இயக்கப்படுமா?
  விருதுநகர்் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி யூனியன் சேந்தநதி கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தபகுதி மக்கள் கல்வி, மருத்துவம், வேலை போன்ற அடிப்படை தேவைகளுக்கு மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்குள்ள  செண்பக மூர்த்தி அய்யனார் கோவிலுக்கு செல்ல சரியான பஸ் வசதி இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சாமி கும்பிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து சேந்தநதிக்கு கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, விருதுநகர்.

Next Story