பொங்கல் பரிசு வழங்குவதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதல்


பொங்கல் பரிசு வழங்குவதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் மோதல்
x
தினத்தந்தி 12 Jan 2022 3:50 AM IST (Updated: 12 Jan 2022 3:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு ெதாகுப்பு வழங்குவதில் தி.மு.க .- அ.தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை:
தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகர் கென்னடி தெருவில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்றது. அந்த பணியை தி.மு.க.வினர் பார்வையிட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த அ.தி.மு.க. பிரமுகர் கணேஷ் (வயது 45) என்பவர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு, கரும்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கணேஷ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர், தன்னை தி.மு.க.வினர் தாக்கியதாக குற்றம் சாட்டினார்.

இதுபற்றி தகவல் அறிந்த அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஜெனி தலைமையில் அந்த கட்சியினர் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். கணேசை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, சம்பவத்தின்போது தி.மு.க.வை சேர்ந்த மணி என்பவர் தன்னை அ.தி.மு.க.வினர் தாக்கியதாக கூறி ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை தி.மு.க.வினர் சந்தித்து ஆறுதல் கூறி, மணியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story