மேலப்பாளையம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது
பொங்கலுக்கு மறுதினம் கரிநாளை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி கால்நடை சந்தை அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று ஆடு, மாடுகள், கோழி உள்ளிட்டவை விற்பனை நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடு, மாடுகளை வாங்கிச்செல்வார்கள். நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பொங்கலுக்கு மறுநாள் கரி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அசைவ பிரியர்கள் இறைச்சி சாப்பிடுவார்கள்.
பெரும்பாலும் ஆடு இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதும். இதையொட்டி ஆடுகள் வாங்குவதற்காக மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடு, மாடுகளோடு சந்தையில் குவிந்தனர். வியாபாரிகளும் தங்களது ஆடுகளை நேரடி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஆடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. எடை குறைவான ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதிகமான இறைச்சி கடைக்காரர்கள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர். இதுதவிர சந்தையை ஒட்டியுள்ள மெயின் ரோட்டில் கோழி மற்றும் மீன்களும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் கோழிகளும் அதிக விலைக்கு விற்பனை ஆனது.
அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ள சூழலில், சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமானதால் நுழைவு வாசலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story