காப்பு கட்டுதலுடன் தைப்பொங்கல் திருவிழா தொடக்கம்


காப்பு கட்டுதலுடன் தைப்பொங்கல் திருவிழா தொடக்கம்
x
தினத்தந்தி 12 Jan 2022 4:48 PM IST (Updated: 12 Jan 2022 4:48 PM IST)
t-max-icont-min-icon

காப்பு கட்டுதலுடன் தைப்பொங்கல் திருவிழா தொடக்கம்

காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் இன்று பொங்கல் திருவிழா தொடங்குகிறது.
பொங்கல் திருநாள்
தமிழர்களுடைய பாரம்பரிய திருவிழாவாக நான்கு நாட்களுக்கு வரிசைகட்டி கொண்டாடப்படும் ஒரு மாபெரும் திருவிழா பொங்கல் திருவிழாவாகும். மார்கழி மாதம் கடைசி நாளான இன்று வியாழக்கிழமை போகிப் பண்டிகையில் ஆரம்பித்து, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று வரிசையாக 4 நாட்களுக்கு ஊரே கோலாகலமாக காட்சி அளிக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்து காணப்படும். போகி பண்டிகையான இன்று மாலை காப்பு கட்டுதல் நடைபெறும். நம் முன்னோர்கள் ஒரு வழிபாட்டு முறையை நமக்காக சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள் என்றால் அதற்கு பின்னால் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது. தை முதல் நாள் பிறப்பதற்கு முந்தைய நாள் தான் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழங்காலங்களில் எல்லாம் நம் முன்னோர்களிடம் பணப்புழக்கம் என்பது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்காது. அதாவது தை மாதம் பிறக்கும் போது அறுவடை செய்து அதில் கிடைக்கும் வருமானம் தான் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானமாக இருக்கும். 
விவசாயம்
பழங்காலத்தில் விவசாயத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. விவசாயம் ஒன்று தான் அதிகமாக மக்கள் பார்த்து வந்த தொழிலாகவும் இருந்தது. விவசாயத்தை நம்பி மட்டுமே அனைவரும் வருடம் முழுவதும் காத்துக் கொண்டிருப்பார்கள். தை மாதம் அறுவடை செய்த பின்னர் தான் அவர்களிடத்தில் பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும்.அந்த வருமானத்தை வைத்து தான் வீட்டை புதுப்பிப்பது, சுப காரியங்கள் செய்வது என்று தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்வார்கள். 
இதனால் தான் போகி பண்டிகை அன்று வீடு முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. அந்தக் காலத்தில் கூரை மற்றும் பனை ஓலை வீடுகள் தான் அதிகம் இருக்கும். பழைய கூரைகளையும், ஓலைகளையும் எரிப்பதற்கு போகி பண்டிகையை பயன்படுத்திக் கொண்டார்கள். போகி பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்வதால் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் வெளியேற காப்பு கட்டுதல் என்ற வழிமுறையை கடைபிடித்தார்கள்.
காப்பு கட்டுதல்
காப்பு கட்டுதல் என்பது வேப்பிலை, பீளைப்பூ, கருந்துளசி, தும்பை இலை, ஆவாரம்பூ ஆகிய ஐந்து மூலிகை பொருட்களைக் கொண்டு ஒன்றாக சேர்த்து கட்டி காப்பாக வீடுகளின் கூரையில் சொருகி வைப்பார்கள். இப்படி வீட்டில் சொறுகி வைப்பதால் வீட்டிற்குள் எந்த ஒரு பூச்சிகளும் வராது. மேலும் இவைகள் தெய்வீக மூலிகை என்பதால் எந்த ஒரு துஷ்ட சக்தியும் வீட்டிற்குள் நுழைய முடியாது.வேப்பிலையை தோரணமாக கட்டுவதும், சொருகி வைப்பதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். நோய்க் கிருமிகளின் தாக்குதல்கள் இன்றி ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கு உதவியாக இருக்கும். வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்துக் கொண்டால் போதும்.
.விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் அந்த சூரியனுக்கும்,  மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்த இந்த நாள் தான் தைத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. போகி அன்று செய்யக்கூடிய ஒரு நிகழ்வுதான் இந்த காப்பு கட்டுதல் ஆகும். சேவூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று தங்களது வீடுகளை சுத்தம் செய்து, சுவர்களுக்கு வெள்ளையடித்து  தரைகளை சாணத்தால் மெழுகியிருந்ததை காணமுடிந்தது.


Next Story