திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா
திருப்பூரில் 150 மாணவர்கள் படிக்கும் வசதியுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
150 மாணவர்கள் படிக்க வசதி
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் மாவட்ட அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் 15 ஏக்கர் காலி இடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளன. ரூ.107 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 2 கட்டிடங்கள், ரூ.125 கோடிக்கு அரசு மருத்துவமனைக்கு 4 கட்டிடங்கள், ரூ.104 கோடியில் குடியிருப்புகளுக்கு 15 கட்டிடங்கள் உள்பட மொத்தம் ரூ.336 கோடியே 96 லட்சம் மதிப்பில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் என மொத்தம் 21 கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 150 எம்.பி.பி.எஸ். மாணவர்கள படிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன.
அரசு மருத்துவக்கல்லூரி தரைத்தளம் மற்றும் 6 மாடிகளுடன் மாணவ-மாணவிகள் படிப்பதற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. 150 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வாகன நிறுத்தம் வசதி, 8 துறைகளுக்கான வகுப்பறை, ஆய்வக வசதிகள், நூலக வதி, 1000 பேர் அமரக்கூடிய கலையரங்கம் ஆகியவை அமைந்துள்ளன. மருத்துவமனை கட்டிடங்கள் தரை மற்றும் 5 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளன. 50 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வாகன நிறுத்த வசதி உள்ளது. 600 படுக்கை வசதி, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் அமைந்துள்ளன.
திறப்பு விழா
கல்லூரி முதல்வர், நிலைய மருத்துவ அதிகாரி மற்றும் உதவி நிலைய மருத்துவ அதிகாரி குடியிருப்பு, மாணவ-மாணவிகள் மற்றும் செவிலியர் விடுதி, மருத்துவ ஆசிரியர் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் அனைத்தும் குடியிருப்பு கட்டிடங்களில் அமைந்துள்ளன. இந்த வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் விளையாட்டு மைதான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கில் செய்யப்பட்டு இருந்தது.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் வினீத், அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் இளஞ்செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதமர் திறந்து வைத்தார்
காணொலிக்காட்சி மூலமாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பின்னர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட 11 அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட கல்வெட்டை மாலை 4.20 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக பொத்தானை அழுத்தி திறந்து வைத்து பேசினார்.
Related Tags :
Next Story