விழுப்புரத்தில் பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம் சமூக இடைவெளியை மறந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம்
விழுப்புரத்தில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சமூக இடைவெளியை மறந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்,
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உருமாறிய கொரோனா- ஒமைக்ரான் வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை, பொதுமக்கள் எளிமையான முறையில் வீடுகளிலேயே கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் புதுப்பானையில் பொங்கலிடும் மரபிற்காக குயவர்களால் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பொங்கலுக்கு பெயர்போன கரும்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.700 வரையும், ஒரு ஜோடி கரும்புகள் ரூ.70 முதல் ரூ.80 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரும்பு விலை உயர்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மார்க்கெட் மற்றும் கடைவீதிகளுக்கு சென்று ஆர்வமுடன் கரும்புகளை வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர். அதுபோல் பொங்கல் விற்பனையில் அங்கம் வகிக்கும் மஞ்சள் கொத்து மற்றும் சிறுவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும், காய்கறி வகைகளும் விழுப்புரம் எம்.ஜி. சாலையில் உள்ள பெரிய மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்த கரும்புகள், மஞ்சள் கொத்து மற்றும் கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் என பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். இதனால் பொங்கல் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பொருட்களை வாங்க விழுப்புரம் நகரில் நேற்று எம்.ஜி.சாலை பெரிய மார்க்கெட், பாகர்ஷா வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களில் பலர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை மறந்தும் பொருட்களை வாங்கிச்சென்றனர். இதனால் கொரோனா, ஒமைக்ரான் தொற்று சமூக தொற்றாக அதிகளவில் பரவ வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம்சாட்டினர்.
போக்குவரத்து நெரிசல்
மேலும் மார்க்கெட்டிற்குள் பொருட்கள் வாங்கச்சென்றவர்களாலும், பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்தவர்களாலும் விழுப்புரம்-புதுச்சேரி சாலை, கே.கே.சாலை, பாகர்ஷா வீதி, திரு.வி.க. வீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் நேற்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story