மாட்டுக்கொட்டகையில் கிடந்த சிறுத்தை குட்டி


மாட்டுக்கொட்டகையில் கிடந்த சிறுத்தை குட்டி
x
தினத்தந்தி 12 Jan 2022 9:07 PM IST (Updated: 12 Jan 2022 9:07 PM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே மாட்டுக்கொட்டகையில் கிடந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

ஆசனூர் அருகே மாட்டுக்கொட்டகையில் கிடந்த  சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
சிறுத்தை குட்டி
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை புலிகள் வசித்து வருகின்றன. அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து சிறுத்தை புலிகள் வனப்பகுதியையொட்டிய கிராமங்கள், தோட்டங்களில்  புகுந்து அங்கு கட்டப்பட்டிருக்கும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வேட்டையாடி வருகின்றன. சில நேரம் காவலுக்காக விடப்பட்டிருக்கும் நாயையும் விட்டு வைப்பது இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
ஆசனூர் அருகே உள்ள பங்களாதொட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது வீட்டின் பின்புறம் மாட்டுக்கொட்டகை வைத்து கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
மீட்டு சிகிச்சை
நேற்று காலை அவர் வழக்கம்போல் மாட்டு தொழுவத்துக்கு சென்றார். அப்போது மாட்டு கொட்டகையின் ஒரு பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று படுத்து கிடப்பதை பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தை குட்டியை பார்வையிட்டனர்.
 அது 3 மாதமே ஆன பெண் சிறுத்தை குட்டி என்றும், அது சோர்வுடன் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து  வனத்துறையினர் சிறுத்தை குட்டியை மீட்டு அருகே உள்ள ஆசனூர் வன அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுத்தை குட்டியை ஒரு கூண்டில் அடைத்தனர். பின்னர் கால்நடை டாக்டர் அசோகன் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் சோர்வுடன் காணப்பட்ட  சிறுத்தை குட்டிக்கு சிகிச்சை அளித்தார்.
கண்காணிப்பு
 இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு தான் தாய் சிறுத்தை குட்டியை தூக்கிக்கொண்டு இங்கு வந்து போட்டு விட்டு சென்றுள்ளது.
மீண்டும் தாய் சிறுத்தை தனது குட்டியை தேடி இரவு நேரத்தில் தான் மாட்டு கொட்டகைக்கு வரும். எனவே அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி தாய் சிறுத்தை வருகிறதா? என்பது கண்காணிக்கப்படு்ம். அவ்வாறு கேமராவில் தாய் சிறுத்தை நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால்  குட்டி சிறுத்தையை தாயிடம் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்’ என்றனர்.
மாட்டுக்கொட்டகையில் சிறுத்தை குட்டி படுத்துக்கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
---------

Next Story