நாகையில், மஞ்சள்கொத்து- மண்பானை விற்பனை மும்முரம்


நாகையில், மஞ்சள்கொத்து- மண்பானை விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 12 Jan 2022 10:06 PM IST (Updated: 12 Jan 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சள் கொத்து, மண்பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

நாகப்பட்டினம்:-

நாகையில் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சள் கொத்து, மண்பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. 

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை அன்று திருமணமான பெண்களுக்கு, அவர்களுடைய தாய் வீட்டில் இருந்து பொங்கல் சீர்வரிசை கொடுப்பது வழக்கம். இந்த பொங்கல் சீர்வரிசையில் கரும்பு, காய்கறிகள், மஞ்சள் கொத்து மற்றும் சில்வர், பித்தளை பாத்திரங்கள் இடம்பெறும்.
பொங்கல் சீர்வரிசை கொடுப்பதற்கும், பொங்கல் நாளில் அதிகாலையில் பொங்கல் வைப்பதற்கும் மஞ்சள் கொத்து அவசியம். இதனால் பொங்கல் பண்டிகையின்போது மஞ்சள் கொத்து விற்பனை அதிகமாக நடைபெறும்.

மண்பானை

நாகை கடைத்தெருவில் கடந்த சில நாட்களாக மஞ்சள் கொத்து விற்பனைக்காக அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வந்துள்ள இந்த மஞ்சள் கொத்துகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். மஞ்சள் கொத்து ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானைகளும் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கோட்டுச்சேரி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த மண் பானைகள் ரூ.70 முதல் ரூ.120, ரூ.200, ரூ.300 வரை அளவுக்கு ஏற்றாற்போல் விற்பனை செய்யப்படுகிறது. 

விற்பனையாளர்கள் மகிழ்ச்சி

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாகையில் மஞ்சள் கொத்து மற்றும் மண்பானை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மண் அடுப்பு ரூ.120, ரூ.150 எனவும், இரட்டை அடுப்பு ரூ.250, ரூ.300 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
என்னதான் காலத்துக்கு ஏற்றபடி பித்தளை, அலுமினியம் என பாத்திரங்கள் வந்தாலும், பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்றைய தலைமுறையினர் மண் பானைகளை வாங்கி பொங்கலிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என மண்பானை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். 

Next Story